இனி கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பேச்சு
இனி கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு,
மண்டியா மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் நேற்று மண்டியாவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
நாம் நமது வாழ்க்கை காலத்தை கொரோனாவுக்கு முன்பு, கொரோனாவுக்கு பின்பு என பிரித்து பார்த்து பார்க்க வேண்டும். கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் தேவையான முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மக்களிடையே விழிப்புணர்வு
இந்த சமுதாயத்தில் இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான நமக்கு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும். அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். வயதானவர்களை அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை அவர்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பசுமை மண்டலத்தில் இருந்த மண்டியா மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தை மீண்டும் பசுமை மண்டலத்திற்குள் கொண்டுவர மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது கொரோனா பாதிப்புகளை தடுக்க வேண்டும். மண்டியா மருத்துவ கல்லூரி தொடர்பாக எனக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
தேர்வு மையம்
இந்த கல்லூரியின் பெருமையை நிலைநாட்ட அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த மருத்துவ கல்லூரியில் தேர்வு மையம் தொடங்கப்படும். இதன் மூலம் இங்கு அதிகளவில் தேர்வுகள் நடைபெறும். பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்குவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு சுதாகர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா, சுமலதா அம்பரீஷ் எம்.பி., புட்டராஜூ எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story