நாகர்கோவிலில் டென்னிசன் தெரு மக்களுக்கு டாக்டர் நேரில் வேண்டுகோள் ‘கொரோனாவின் தீவிரம் உணர்ந்து பொறுமையாக இருங்கள்’
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட டென்னிசன் தெரு மக்களை டாக்டர் அஜய் மஞ்சு நேரில் சந்தித்து, ‘நோயின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக இருக்க வேண்டும்‘ என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட டென்னிசன் தெரு மக்களை டாக்டர் அஜய் மஞ்சு நேரில் சந்தித்து, ‘நோயின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக இருக்க வேண்டும்‘ என்று வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸ்
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் டென்னிசன் தெருவை சேர்ந்தவரும் ஒருவர் ஆவார். கொரோனா கண்டறியப்பட்டதும் அவர் வசித்து வந்த பகுதியில் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் வெளியே செல்லவும், வெளி நபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் அங்கு தடை இன்னும் நீக்கப்படாமல் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
திடீர் வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் டென்னிசன் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் திடீரென வெளியே வர முயன்றனர். தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதும் கிடைப்பதில்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததால் எங்கள் பகுதியில் தடையை நீக்க வேண்டும் என்றும் கோரி போலீசாருடன் திடீரென வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அங்கு வந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதோடு போலீசாரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அமைதி அடைந்து தங்கள் வீடுகளுக்கு சென்றார்கள்.
அறிவிப்பு
இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று தடை செய்யப்பட்ட மக்களுக்கு ஒரு அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. அதாவது “கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவே இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே மக்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து தடை செய்யப்பட்ட பகுதியை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும். மாவட்ட நிர்வாகம் தடையை நீக்கும் வரை அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஜய் மஞ்சு தடை செய்யப்பட்ட பகுதியான டென்னிசன் தெருவுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலமாக இந்த வேண்டுகோளை விடுத்தார். மேலும் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். அப்போது சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story