பிறந்ததும் உடல் நீலநிறமாக மாறியதால் தீவிர சிகிச்சை: குணமடைந்த குழந்தை தாயிடம் ஒப்படைப்பு குமரி- கேரள எல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்
பிறந்ததும் உடல்நீலநிறமாக மாறிய நாகர்கோவில் குழந்தைக்கு கேரள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. பின்னர் இந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
களியக்காவிளை,
பிறந்ததும் உடல்நீலநிறமாக மாறிய நாகர்கோவில் குழந்தைக்கு கேரள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. பின்னர் இந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
குமரி-கேரள எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உடல் நீலநிறமாக மாறியது
நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் பைசல். இவருடைய மனைவி சோபியா நசீம் பானு. இந்த தம்பதிக்கு கடந்த 14-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. உடல் நீலநிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஊரடங்கால் அதில் பல சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குழந்தையை கொண்டு செல்ல எந்தவொரு நெருக்கடி இல்லாமல் ஆம்புலன்ஸ் கேரள எல்லையை கடந்து சென்றது. சுமார் 280 கி.மீ பயணத்துக்கு பிறகு குழந்தை அந்த ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.
காப்பாற்றப்பட்ட குழந்தை
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினர். மேலும் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. டாக்டர்களின் தீவிர முயற்சியால் குழந்தையின் உடல் நிலை படிப்படியாக சீராகி முழுமையாக குணமடைந்தது.
இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் சோபியா நசீம் பானு, பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பிறந்த உடன் பார்த்த குழந்தையை, மறுநாளே சிகிச்சைக்காக கொண்டு சென்றதால் அவர் பரிதவித்தார். ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு என்னாச்சோ, எப்படி இருக்கிறதோ என புலம்பிய வண்ணம் இருந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்பதை எண்ணியதும், பூரிப்படைந்தார். இதனால் அவர் அடைந்த சந்தோசத்துக்கு அளவே கிடையாது. பிறகு, குழந்தையை பெற்று கொள்வதற்காக குமரி மாவட்ட எல்லைக்கு தாய் சோபியா நசீம் பானு மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
எல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்
தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் நாகர்கோவில் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் குழந்தையின் தாய் தயார் நிலையில் இருந்தார். அப்போது கேரள ஆம்புலன்சு வந்தது.
அந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள், குழந்தையை சோபியா நசீம் பானுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடினார். ஆனந்த கண்ணீருடன் குழந்தையை பெற்ற அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஊரடங்கு சமயத்தில், பல இடைஞ்சலுக்கு இடையே குழந்தையை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு உதவியாக இருந்த முதல்-மந்திரி பினராயி விஜயன், குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் இருமாநில போலீசார், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அப்போது, விஜயதரணி எம்.எல்.ஏ. உடன் இருந்தார். இருமாநில எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story