ஊரடங்கால் முடங்கிய அரசு போக்குவரத்து கழகம்: குமரியில் இதுவரை ரூ.54 கோடி வருவாய் இழப்பு


ஊரடங்கால் முடங்கிய அரசு போக்குவரத்து கழகம்: குமரியில் இதுவரை ரூ.54 கோடி வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 30 April 2020 6:24 AM IST (Updated: 30 April 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் ஊரடங்கால் முடங்கிய அரசு பஸ்களால் இதுவரை ரூ.54 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள் பழுதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில், 

குமரியில் ஊரடங்கால் முடங்கிய அரசு பஸ்களால் இதுவரை ரூ.54 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள் பழுதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு

ஆட்கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடிவருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஊரடங்கு, சமூக இடைவெளி உள்ளிட்டவை மூலமாகவும், முக கவசம், கையுறை அணிந்து கொள்வதாலும் தான் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இதுவரை நிலவுகிறது.

இதனை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றது. எனினும் நெருக்கடி மிகுந்த இடங்கள், பெரிய நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற இடங்களில் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

பஸ்கள் முடக்கம்

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்துள்ளது என்றே கூறலாம். எனினும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம், பாகுபாடின்றி அனைவருக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அதில், அரசாங்கமும் விதிவிலக்கல்ல. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாயை தரும் பஸ் போக்குவரத்து, ஊரடங்கால் அடியோடு முடங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் ஓய்வெடுத்து வருகிறது.

760 பஸ்கள்

குமரி மாவட்டத்தில் இருந்து 12 பணிமனைகள் மூலமாக தினமும் 760 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 620 அரசு பஸ்கள் உள் மாவட்ட பகுதிகளுக்கும், 140 பஸ்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் மூலம் நாள் ஒன்றுக்கு நாகர்கோவில் மண்டலத்துக்கு ரூ.1 கோடி வருவாயாக கிடைத்து வருகிறது. இதில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மூலமாகத்தான் அதிக வருவாய் கிடைப்பதாகவும், இதில் பாதி தொகை டீசலுக்கு செலவாகி விடும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஊரடங்கு தொடங்கி நேற்றுடன் 36 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதனால் நாகர்கோவில் மண்டலத்துக்கு ரூ.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.18 கோடி

இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட 4 பணிமனைகளைச் சேர்ந்த 182 பஸ்கள் வெளி மாவட்ட பகுதிகளுக்கும், வெளி மாநில பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த 36 நாட்களில் ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து குமரி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த 36 நாட்களில் ரூ.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள், அதிகாரிகள் சம்பளமாக ரூ.16 கோடி செலவாகி விடும். நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் லிட்டர் டீசல் செலவாகும். தற்போது டீசல் செலவு இல்லாவிட்டாலும் சம்பளம் கொடுத்து தான் ஆக வேண்டும். மேலும் பஸ்களுக்கான வரிகள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, மின் கட்டணம் போன்றவற்றை செலுத்தி தான் ஆக வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் பஸ்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து தான் செலுத்தி வருகிறோம்.

இது ஒருபுறமிருக்க பஸ்கள் இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால் பேட்டரி சார்ஜ் இறங்கி செயல் இழந்து போக வாய்ப்பு உள்ளது. டயர்களும் பழுதாகி விடும். இதன் பாதிப்பு பிற்காலங்களில் தான் தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story