திருச்சி மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி வைக்காததால் கொரோனா பரவும் அபாயம்


திருச்சி மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி வைக்காததால் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 30 April 2020 8:01 AM IST (Updated: 30 April 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் உள்ள பல ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி வைக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி மாநகரில் உள்ள பல ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி வைக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருபவர்கள் முக கவசங்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரேஷன் கடை, மளிகைக்கடை, சந்தை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளிவிட்டு சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்றும், அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கிருமிநாசினி வைக்க உத்தரவு

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்களின் நலன்கருதி கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், முக்கியமாக கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டிருந்தார்.

கலெக்டர் உத்தரவிட்டு 2 நாட்கள் ஆகியும் திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான ஏ.டிஎம். மையங்களில் கிருமிநாசினி திரவம் வைக்கப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கான ஏ.டி.எம். மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, முறையாக இயங்காமல் தவித்தாலும் வங்கிகள் மட்டும் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:-

நடவடிக்கை பாயுமா?

வங்கி ஏ.டி.எம். மையங்கள்தான் தற்போது பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. நேரடியாக ரூ.50 ஆயிரம்வரை பணம் எடுக்க வேண்டும் என்றாலும் சரி, பணம் போடவேண்டும் என்றாலும் சரி வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் ஏ.டி.எம். மையங்களையே பயன்படுத்துமாறு கூறுகிறார்கள். பெரிய தொகை மற்றும் காசோலைகளை மட்டுமே வங்கிகள் கையாளுகிறது. எனவே, ஏ.டி.எம். மையங்களைத்தான் பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் சூழல் உள்ளது. பல ஏ.டிஎம். மையங்களில் காவலர்களே நியமிக்கப்படவில்லை. அதேபோல் பல்வேறு வங்கி ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினியும் வைக்கப்படவில்லை.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி வைக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story