ஊரடங்கால் காவிரி ஆற்றில் குவாரி மூடல்: 2 ஆயிரம் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊரடங்கால் காவிரி ஆற்றில் மணல் குவாரி மூடப்பட்டதால் 2 ஆயிரம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள்.
திருச்சி,
ஊரடங்கால் காவிரி ஆற்றில் மணல் குவாரி மூடப்பட்டதால் 2 ஆயிரம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள்.
மணல் குவாரி
திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உத்தமர் சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மணல் கொண்டுசெல்லப்பட்டு வந்தது. பின்னர் பல்வேறு போராட்டங்களால் அவை மூடப்பட்டது. ஒரு இடத்தில் மட்டும் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அதுவும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இயங்கவில்லை. அதேவேளையில், மணல் குவாரியில் அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 2 ஆயிரம் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தனியாக மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி, சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தில் இணைந்த திருச்சி மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
ஒரு குவாரிக்கு அனுமதி
திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து, மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டனர்.
லாரிகளில் இஷ்டத்துக்கு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். இதைத்தடுக்க மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கரூர் மாவட்டம் மாயனூர் முதல் கல்லணை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் அள்ளும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும்.
லாரிகளில் மணல் அள்ளும் மணல் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டுள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதன்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அரசு சார்பில் கீழ முள்ளுக்குடியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென்று மணல் ரீச் (குவாரி) அமைக்கப்பட்டது. மணல் அள்ளும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து ஆன்லைன் மூலம் பதிவு செய்தபின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
2 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
இந்த நிலையில் ஊரடங்கால் 2 ஆயிரம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த 4 ஆயிரம் மாடுகளும் தீவனம் இன்றி சிரமப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக பிழைப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் ராமர் கூறியதாவது:-
ரூ.8 ஆயிரம் நிவாரணம்
திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டிக்கென்று ஒரே குவாரிதான் சர்க்கார்பாளையம் அருகே உள்ள கீழமுள்ளுக்குடியில் இயங்கி வருகிறது. மேலும் தாளக்குடி, கூகூர் ஆகிய இடங்களில் கூடுதல் மணல் குவாரி திறக்க கேட்டோம். அதற்கு முடிவு இன்னும் வரவில்லை.
இந்த நிலையில்தான் கொரோனா தடுப்பு ஊரடங்கால் செயல்பாட்டில் இருந்த ஒரு குவாரியும் மூடப்பட்டு கடந்த 38 நாட்களாக 2 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து தொழிலாளர்களுக்கு தினம் ரூ.200 வீதம் கணக்கில் கொண்டு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களும் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story