ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைப்பு பரபரப்பு வாக்குமூலம்
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலையை வெட்டிவிடுவேன் என்று மிரட்டியதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பிரபல ரவுடி கொலை
திருச்சி திருவானைக்காவல் வெள்ளிதிருமுற்றம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரமோகன்(வயது 38). இவருக்கு தலைவெட்டி சந்துரு என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை, விராலிமலை, உறையூர், தில்லைநகர், கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 31 வழக்குகள் உள்ளன. சந்துருவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை சந்துரு தனது மகளை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு ஸ்ரீரங்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தேவி தியேட்டர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த கார், சந்துருவின் ஸ்கூட்டரை இடித்து தள்ளியது. அந்த காரில் இருந்து இறங்கிய 3 பேரில் ஒருவர் குழந்தையை தூரமாக கொண்டு சென்று விட்டார். மற்ற 2 பேரும் அரிவாளால் சந்துருவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
5 பேர் கைது
பின்னர் சந்துருவின் தலையை துண்டித்து காரில் வைத்துக்கொண்டு 3 பேரும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தபோது, ஸ்ரீரங்கம் ரெயில்வே டி பிரிவு பகுதியை சேர்ந்த சரவணன்(35), அவரது தம்பி சுரேஷ்(30), சரவணனின் சித்தப்பா மகன் செல்வம்(24) என்பதும், முன்விரோதம் காரணமாக சந்துருவை ஸ்ரீரங்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வைத்து வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தலை இல்லாத அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலையில் சந்துரு வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்காணித்து சரவணன் உள்ளிட்ட 3 பேருக்கும் தகவல் தெரிவித்த ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்த விஜயஅமல்ராஜ்(25), பிரகாஷ்(32) உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்கள், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான சரவணன் மீதும் ஸ்ரீரங்கம், கொள்ளிடம், ஜீயபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த கொலை சம்பவம் குறித்து சரவணன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக நான் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது, அங்கு வந்த சந்துரு என்னிடம், நீ என்ன பெரிய ஆளா, இப்போது நினைத்தாலும் உன் தலையை வெட்டி கையில் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நான் சந்துருவால் எப்போது வேண்டுமானாலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்தேன்.
இதனால், சிறையில் இருந்தபோது சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டேன். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த வாரம் எனக்கு ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்தேன். கடந்த 3 நாட்களாக என்னை யாரோ நோட்டமிடுவதுபோல் இருந்தது. இது சந்துருவின் வேலையாக தான் இருக்கும் என நினைத்த நான், அவன் முந்திக் கொள்வதற்கு முன் நான் முந்திக்கொண்டு சந்துருவை கொலை செய்து தலையை துண்டித்து தனியே எடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கட்ட பஞ்சாயத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்துருவின் தாயை ஒருவர் அடித்துள்ளார். ஆத்திரம் அடைந்த சந்துரு அந்த நபரின் கையை வெட்டியுள்ளார். இந்த வழக்கில் பால் வியாபாரி ஒருவர் சந்துருக்கு எதிராக சாட்சி கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு பால் வியாபாரியின் தலையை துண்டித்து சந்துரு கொலை செய்துள்ளார். அதன்பிறகே அவரை தலைவெட்டி சந்துரு என அழைக்க தொடங்கி உள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அவ்வப்போது கட்ட பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சந்துருவுக்கு அரசியல் பின்புலமும் இருந்ததால் அந்த பகுதியில் தலைவெட்டி சந்துரு என்ற அடைமொழியுடன் வலம் வந்துள்ளார்.
இதேபோல் சரவணனுக்கும் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் பக்கத்து, பக்கத்து தெருவில் வசிப்பதால் அடிக்கடி உரசல் இருந்து வந்துள்ளது. பல சமயங்களில் சரவணனை சந்துரு மிரட்டி சென்றுள்ளார். இதனாலேயே சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்துருவை கொலை செய்து பழி தீர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story