ஈரோட்டில் இருந்து கரூருக்கு நடந்து வந்த தொழிலாளர்கள் போலீசார் உதவியுடன் சொந்த ஊருக்கு பயணம்


ஈரோட்டில் இருந்து கரூருக்கு நடந்து வந்த தொழிலாளர்கள் போலீசார் உதவியுடன் சொந்த ஊருக்கு பயணம்
x

ஈரோட்டில் இருந்து கரூருக்கு நடந்து வந்த தொழிலாளர்கள் போலீசார் உதவியுடன் சரக்கு வேனில் சொந்த ஊருக்கு சென்றனர்.

கரூர், 

ஈரோட்டில் இருந்து கரூருக்கு நடந்து வந்த தொழிலாளர்கள் போலீசார் உதவியுடன் சரக்கு வேனில் சொந்த ஊருக்கு சென்றனர்.

மஞ்சள் வெட்டும் தொழிலாளர்கள்

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த மஞ்சள் வெட்டும் தொழிலாளர்கள் 13 பேர் கடந்த பிப்ரவரி மாதம், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் பகுதிக்கு மஞ்சள் வெட்டுவதற்காக சென்றுள்ளனர். பின்னர் நடுபாளையத்தில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள்களை குத்தகை எடுத்து வெட்டி கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உரிய வேலையை முடித்தனர். பின்னர் சொந்த ஊருக்கு செல்வதற்காக முடிவு செய்தனர். இருப்பினும் ஊரடங்கால் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் அவர்கள் அங்கேயே தங்கி, தங்களிடம் கையில் இருந்த பணத்தை வைத்து அப்பகுதியில் கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தனர். இந்தநிலையில் அந்த பணமும் முழுமையாக தீர்ந்து விட்டது. இதனால், கடந்த சில நாட்களாக உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து நடுப்பாளையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

போலீசார் உதவி

பின்னர் ஈரோட்டில் இருந்து கொடுமுடி வழியாக கரூர் வந்தனர். கரூர் பஸ்நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது தொழிலாளர்கள், பஸ் போக்குவரத்து இல்லாததால் நாங்கள் ஈரோட்டில் இருந்து நடந்தே வருகிறோம் என்று கூறினர்.

இதனால் மனம் இறங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் மற்றும் போலீசார் தங்களது கைகளில் இருந்த பணத்தை வைத்து ஒரு சரக்கு வேனில் கரூரில் இருந்து அய்யம்பாளையத்திற்கு தொழிலாளர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அப்போது தொழிலாளர்கள், போலீசாரிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றனர்.

Next Story