வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்கள்


வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்கள்
x
தினத்தந்தி 30 April 2020 10:31 AM IST (Updated: 30 April 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் ஆன்லைன் மூலம் பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்துகின்றனர்.

வாணாபுரம்,

ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. விடுமுறையால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வீடுகளில் உள்ளனர். வாணாபுரத்தை அடுத்துள்ள வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். பேராசியர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்தபடியே மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் மடிக்கணினி மூலமாகப் பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவ-மாணவிகளும் தங்களின் வீடுகளில் இருந்தபடியே பாடங்களை கவனித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் பாண்டியன் கூறியதாவது:-

தேர்வுகளை எளிதில் கையாளும் வகையில்

இந்தக் கல்லூரியில் 280-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அன்றாடம் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். தற்போது ஊரடங்கால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவ-மாணவிகள் வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவை நடக்க உள்ளதால் தினமும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் பாடம் நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர்கள் மூலம் கால அட்டவணைப்படி பாடங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக மாணவ-மாணவிகள் எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்வுகளை எளிதில் கையாளும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story