தூத்துக்குடியில் தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தூத்துக்குடியில் தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க கிடைத்து உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து சலவை தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 187 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர், தீயணைப்பு வாகனம் மூலம் அங்குள்ள அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி கலந்த தண்ணீரை தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளாத்திகுளம் அருகே புதூரில் 165 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், பங்குத்தந்தை அல்போன்ஸ் பவுல்ராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பரிசோதனை ஆய்வகம்
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் அறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், சளி மாதிரிகள் இதற்கு முன்பாக மதுரை அல்லது நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. முதல்–அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் ரூ.80 லட்சம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆய்வகத்தின் மூலம் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் ரத்தம், சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் 6 மணி நேரத்தில் கிடைக்கிறது. நாள்தோறும் சுமார் 200 மாதிரிகள் இந்த ஆய்வகத்தின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் விரைவில் கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு தனியார் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்காக அனுமதி பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story