தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 மண்டலங்களில் இன்று கட்டுப்பாடுகள் தளர்வு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 மண்டலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நாளை (அதாவது இன்று) வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடுகள் தளர்வு
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு அமைந்து உள்ள, 10 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 28 நாட்களாக நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் புதிய தொற்று ஏற்படவில்லையெனில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி செய்துங்கநல்லூர் மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. நாளை (அதாவது இன்று) 3 மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தொடர்ச்சியாக மற்ற மண்டலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
பாதிப்பு இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வார்டு மற்றும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டத்தில் எந்த முதல்நிலை களப்பணியாளர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பருப்பு, அரிசி ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன. மற்ற தொழிற்சாலைகள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன, அதில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை முதல்-அமைச்சர் கேட்டு உள்ளார்.
அதனை அனுப்பி உள்ளோம். அதனை பரிசீலித்து எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும். அதன்பிறகு எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரம்
ஊரடங்கு தளர்வு வந்தாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை தவிர்த்து சுகாதாரத்தை பேண வேண்டும். அப்போதுதான் நோய் மீண்டும் பரவாமல் தடுக்க முடியும்.
மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story