செங்கோட்டையில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தலைதெறிக்க ஓட்டம்


செங்கோட்டையில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தலைதெறிக்க ஓட்டம்
x
தினத்தந்தி 30 April 2020 10:30 PM GMT (Updated: 2020-05-01T00:46:01+05:30)

செங்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் டிரோன் கேமராவை பார்த்ததும் தலைதெறிக்க ஓடினார்கள்.

செங்கோட்டை, 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்தொற்று பரவாமல் இருக்க அனைத்து துறைகளை சேர்ந்தவர்கள் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே சிலர் ஊரடங்கு நேரத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பதால் காவல்துறை சார்பில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சியாம் சுந்தர், கோபால் மற்றும் போலீசார் செங்கோட்டை பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக செங்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிறுவர்கள் ஓட்டம்

செங்கோட்டை பகுதியில் அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் நடமாட்டம் இல்லை. அதேபோல் செங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பிரதான சாலையில் மக்கள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் செங்கோட்டை மேலூர், தேன்பொத்தையில் மறைவான வெட்டவெளி பகுதிகள் மற்றும் புறவழிச்சாலை ஆகியவற்றை டிரோன் கேமரா மூலம் செங்கோட்டை போலீசார் கண்காணித்தனர். 

அப்போது மேலூர் பகுதியில் ஓரிடத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கு டிரோன் கேமரா பறந்ததை பார்த்ததும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட அனைவரும் தலைதெறிக்க ஓடினார்கள். 

இதனை கண்ட போலீசார் கண்காணித்து அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story