இலக்கியம்பட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிப்பு
பாசி படர்ந்த இலக்கியம்பட்டி ஏரி நீரில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி நகரையொட்டி உள்ள இலக்கியம்பட்டி ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் தர்மபுரி-சேலம் சாலையில் செந்தில்நகர் பகுதிக்கு எதிரே இலக்கியம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் கணிசமான அளவில் தேங்கும்போது சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 கி.மீ. பரப்பளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
குறிப்பிடத்தக்க அளவில் விவசாய நிலங்களும் இந்த ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் தற்போது தேங்கியுள்ள மழைநீரில் பாசிகள் அதிக அளவில் படர்ந்துள்ளன. இதனால் ஏரி நீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.
இந்த ஏரியில் பல்வேறு வகையான மீன்கள் வளர்ந்து வந்தன. கடந்த சில நாட்களாக ஏரிநீரில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதக்க தொடங்கி உள்ளன.
ஏரி நீர் மாசடைந்து உள்ளதால் அதில் உள்ள மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீன்கள் இறந்து மிதப்பதால் ஏரிக்கரை பகுதிகளில் துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ஏரிநீரில் பாசிகள் அதிகஅளவில் படர்ந்து உள்ள நிலையில் மீன்கள் இறந்து மிதப்பது சுற்றுவட்டார பகுதியின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றவும் ஏரியில் தேங்கும் தண்ணீரின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story