பாலக்கோடு அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிப்பு: ஊரடங்கை மீறி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்


பாலக்கோடு அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிப்பு: ஊரடங்கை மீறி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2020 5:00 AM IST (Updated: 1 May 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஊரடங்கை மீறி காலிக்குடங்களுடன் பொது இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

பாலக்கோடு அருகே கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஊரடங்கை மீறி காலிக்குடங்களுடன் பொது இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் உள்ள பொது கிணற்றை தூர்வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் பொரத்தூர் காலனி அமைந்துள்ளது. இங்கு 120 குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் வீடுகளில் உள்ளனர். இதனால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த பகுதியில் உள்ள பொது கிணற்றை தூர்வார வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களே ஒன்று கூடி அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமத்திற்குள்ளான இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பொது இடத்தில் கூட்டமாக திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி நடந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் 3 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குடிநீர் கிடைக்காததால் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கூட மறந்து போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொது கிணற்றை தூர்வாரும் பணியில் நாங்களே இறங்கி விட்டோம். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story