கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சோதனை சாவடியிலேயே பரிசோதனை: பொதுமக்கள் வலியுறுத்தல்


கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சோதனை சாவடியிலேயே பரிசோதனை: பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 May 2020 4:45 AM IST (Updated: 1 May 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சோதனை சாவடியிலேயே பரிசோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாமக்கல், 

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலேயே அவர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 49 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 12 பேர் கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறும் நபர்களில் 2 பேர் லாரி டிரைவர்கள். இவர்களில் ஒருவர் நாமக்கல் அருகே தாத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் மத்திய பிரதேசம் சென்று திரும்பியபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்றொருவர் நாமக்கல் குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் தெலுங்கானா சென்று திரும்பியபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் லாரி உரிமையாளர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இருப்பினும் பரிசோதனைக்கு பிறகு வீடுகளில் தங்களை முறையாக தனிமைப்படுத்தி கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.

எனவே வெளி மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு சென்று திரும்புபவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட எல்லையிலேயே சோதனை சாவடிகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பகுதியிலேயே முகாம் அமைத்து அவர்களை தங்க வைத்து, கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தற்போது சோதனை சாவடிகளில் ‘தெர்மல் ஸ்கேனர்’ கொண்டு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் எவ்வித அறிகுறியும் இன்றி தற்போது கொரோனா பரவுவதால் நேரடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

Next Story