262 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்


262 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 1 May 2020 3:45 AM IST (Updated: 1 May 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 262 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.

மேட்டூர், 

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த ஆண்டு பருவ மழை தீவிரமாக பெய்தது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இதனிடையே அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை கடல் போல காட்சி அளித்தது. அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக அதிகரித்தும், குறைந்தும் வந்தது. இதனால் நீர்மட்டமும் குறைந்தும், அதிகரித்தும் வந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்க தாகும்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 107 அடியாக இருந்தது. தொடர்ந்து நேற்று வரை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக இருந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று வரை 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. இதன்படி தொடர்ந்து 262 நாட்களாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அணைக்கு வினாடிக்கு 455 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Next Story