சேலம் மாநகரில் 40 இடங்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த முடிவு: போலீஸ் துணை கமிஷனர் பேட்டி


சேலம் மாநகரில் 40 இடங்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த முடிவு: போலீஸ் துணை கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 30 April 2020 10:45 PM GMT (Updated: 2020-05-01T02:47:10+05:30)

சேலம் மாநகரில் 40 இடங்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் வசித்து வந்த இடங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம், வாகனங்கள் பறிமுதல், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தினமும் காலை வேளையில் சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதை காணமுடிகிறது.

இந்த நிலையில், சேலம் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இந்த டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோரிடம் தேவையில்லாமல் வெளியில் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3 ஆயிரத்த 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கிறது. ஏனென்றால் 4 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் வெளியில் யாரும் வரவில்லை. தற்போது முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பலர் வெளியே வந்து செல்கிறார்கள்.

இதை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் மாநகரில் ஏற்கனவே 32 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேலும் 8 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாநகரில் 40 இடங்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சேலம் நகருக்குள் யாரும் வராதபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வெளிமாவட்டங்களில் இருந்து 28 பேர் சேலத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று வந்தால் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அவர் கூறினார்.

Next Story