செங்குன்றம் அருகே, வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார் - கொலையா? போலீஸ் விசாரணை
செங்குன்றம் அருகே வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் ரங்கா கார்டனில் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக அங்கு கட்டுமான பணி நடைபெறவில்லை. நேற்று அந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அதில் புதிதாக கட்டப்படும் அந்த கட்டிடத்தின் உள்ளே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர் இறந்து 3 நாட்களுக்குமேல் இருக்கலாம் என தெரிகிறது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த 3 தினங்களுக்கு முன்பு 4 வாலிபர்கள், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். 4 பேரும் அந்த புதிய கட்டிடத்துக்குள் சென்றனர். 2 மணி நேரம் கழித்து 3 பேர் மட்டும் வந்து அவரவர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றனர். ஒருவர் மட்டும் வெளியில் வரவில்லை. அவரது மோட்டார் சைக்கிளும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது என்றனர்.
எனவே அந்த 3 வாலிபர்கள்தான் அவரை கொலை செய்துவிட்டு, உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து பிணமாக கிடந்தவர் யார்? அவருடன் வந்த மற்ற 3 பேர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story