பேராவூரணி பஸ் நிலையத்தில் இறந்த வேளாங்கண்ணியை சேர்ந்த ஆதரவற்ற முதியவரின் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு


பேராவூரணி பஸ் நிலையத்தில் இறந்த வேளாங்கண்ணியை சேர்ந்த ஆதரவற்ற முதியவரின் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 1 May 2020 4:15 AM IST (Updated: 1 May 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி பஸ் நிலையத்தில் முதுமையால் உயிரிழந்த வேளாங்கண்ணியை சேர்ந்த ஆதரவற்ற முதியவரின் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வின் மனிதநேய செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

பேராவூரணி, 

பேராவூரணி பஸ் நிலையத்தில் முதுமையால் உயிரிழந்த வேளாங்கண்ணியை சேர்ந்த ஆதரவற்ற முதியவரின் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வின் மனிதநேய செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

ஆதரவற்ற முதியவர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 78). இவரது மனைவி அஞ்சம்மாள்(68) இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்று தெரிகிறது. ஆதரவற்ற நிலையில் பல்வேறு ஊர்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பேராவூரணி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள், நீலகண்ட பிள்ளையார் கோவில் வாசலில் தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்க்கையை கழித்து வந்ததாகவும், இவர்களுக்கு கோவில் ஊழியர்கள் மூன்று வேளையும் உணவளித்து வந்ததாகவும் தெரிகிறது.

மயங்கி விழுந்து இறந்தார்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதைத் தொடர்ந்து நீலகண்ட பிள்ளையார் கோவிலும் பூட்டப்பட்டது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வராததால் வருமானம் இல்லாமல் தவித்த தம்பதிகள் கோவிலுக்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு பேரூராட்சி, வருவாய்த்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அங்கிருந்த கழிவறைக்கு சென்ற முதியவர் முருகன் மயங்கி விழுந்துள்ளார். கழிவறைக்கு சென்ற கணவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அஞ்சம்மாள் கணவரை தேடிச்சென்றார். அப்போது முருகன் மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. ஆதரவற்ற நிலையில் இறந்த கணவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் அஞ்சம்மாள் தவித்தார்.

உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராசு உடனடியாக பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

பின்னர் வருவாய்த்துறை, பேரூராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், கிராம உதவியாளர் சக்திவேல் ஆகியோர் விரைந்து வந்தனர். இறந்த முருகனின் உடலுக்கு கோவிந்தராசு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முருகனின் மனைவிக்கு ஆறுதல் கூறியதுடன் அவருக்கு பண உதவியும் அளித்தார். அத்துடன் அதிகாரிகளிடம், சட்ட நடைமுறைகளை விரைவாக முடித்து உடலை அடக்கம் செய்ய அறிவுறுத்தினார்.

பாராட்டு குவிகிறது

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பலரும் வெளியே வர தயங்கும் நிலையில், ஆதரவற்ற நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன் அவரது உடல் அடக்கம் நல்ல முறையில் நடக்க நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ.வின் மனிதாபிமான செயல், சமூக வலைத்தளங்களில் பரவி பாராட்டு குவிந்து வருகிறது.

Next Story