மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் தஞ்சை கலெக்டர் தகவல்


மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் தஞ்சை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 April 2020 11:01 PM GMT (Updated: 2020-05-01T04:31:53+05:30)

மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

தஞ்சாவூர்,

மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

நிவாரண உதவி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் ஊராட்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தன்னார்வலர்கள் சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவியாக 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ரூ.250 மதிப்பிலான அத்தியாவசிய உணவு பொருட்கள் ஆகியவற்றை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார். பின்னர் அவர், சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தஞ்சை பிள்ளையார்பட்டியில் தன்னார்வலர்கள் சார்பில் 2,175 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு மற்றும் கபசுர குடிநீரையும் கலெக்டர் வழங்கினார்.

வெளி மாநில தொழிலாளர்கள்

பின்னர் தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சந்தித்து, அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுரையின்படி, வெளிமாநில தொழிலாளர்களை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தொடர்ந்து, வல்லம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை பார்வையிட்டு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை தடையின்றி செய்து தருமாறு வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அப்போது தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தாசில்தார்கள் வெங்கடேசன், அருள்ராஜ், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story