கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க போலீசார் தயாராக இருக்க வேண்டும் - மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவு


கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க போலீசார் தயாராக இருக்க வேண்டும் - மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2020 11:11 PM GMT (Updated: 2020-05-01T04:41:50+05:30)

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை, 

நாசிக் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, மாவட்ட பொறுப்பு மந்திரி சகன் புஜ்பால், வேளாண்மை துறை மந்திரி தத்தா புசே, கலெக்டர் சூரஜ் மந்தாரே, மண்டல கமிஷனர் ராஜாராம் மானே மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு மந்திரி அனில் தேஷ்முக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது மாநிலத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. நாசிக் மாவட்டத்தில் 1,900 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி வருகிறார்.

தயாராக இருக்க வேண்டும்

மே 3-ந் தேதி ஊரடங்கு முடிவுக்கு வருவதை காண மராட்டிய மக்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் மே 3-ந் தேதிக்கு பிறகும் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் எந்த இடத்திலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க காவல்துறை தயாராக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாலேகாவில் முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பெரிய அளவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க கவனம் செலுத்தப்பட வேண்டும். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story