காவிரி மேலாண்மை ஆணையம், ஜலசக்தி துறையுடன் இணைப்பு: அரசாணை நகலை தீ வைத்து எரித்து விவசாயிகள் போராட்டம்


காவிரி மேலாண்மை ஆணையம், ஜலசக்தி துறையுடன் இணைப்பு: அரசாணை நகலை தீ வைத்து எரித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2020 4:45 AM IST (Updated: 1 May 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறையுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அது தொடர்பான அரசாணை நகலை விவசாயிகள் தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி, 

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறையுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அது தொடர்பான அரசாணை நகலை விவசாயிகள் தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஜலசக்தி துறையுடன் இணைத்துள்ளது. இதற்கு விவசாயிகள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜலசக்தி துறையுடன் காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைக்கும் அரசாணை நகலை எரித்து மன்னார்குடியில் நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை தொடக்கம் முதலே எதிர்த்து வந்த கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

அதிர்ச்சி அளிக்கிறது

தற்போது ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக ஜல சக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைத்து அதற்கான அரசாணை ஜனாதிபதியால் கடந்த 20-ந் தேதி பிறப்பிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில் அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்துக்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

கண்டன தீர்மானம்

எனவே தமிழக அரசு சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை பெற்று சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று ஜனாதிபதியின் அரசாணையை ரத்து செய்வதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் மனோகரன் உடன் இருந்தனர்.

வயலில் கருப்புக்கொடி

அதேபோல் மத்திய அரசு ஜலசக்தி துறையுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைத்ததை கண்டித்து நாகை அருகே பாலையூர் கிராமத்தில் பருத்தி நடவு செய்திருந்த வயலில் கருப்புக்கொடியை நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசின் இந்த புதிய அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசின் இந்த அரசாணையை கண்டித்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூறி உள்ளனர்.

Next Story