முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா? எம்.எல்.சி. தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் - கவர்னர் புதிய நடவடிக்கையால் பரபரப்பு
உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி. பதவியில் நியமிக்க கோரும் விவகாரத்தில் கவர்னர் புதிய முடிவு எடுத்து உள்ளார். அதன்படி காலியாக உள்ள எம்.எல்.சி. தேர்தலை நடத்தும்படி அவர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.
எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லாமல் பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி நீடிப்பதற்கு அரசியலமைப்பு விதியின்படி 6 மாதத்திற்குள் அதாவது மே 28-ந் தேதிக்குள் மேற்கண்ட ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும்.
அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் முடிந்த நிலையில், இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ ஆகாமல் இருக்கிறார்.
மாநிலத்தில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு கடந்த 24-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் மூலம் எம்.எல்.சி. ஆக தேர்வாகி முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொள்ளலாம் என உத்தவ் தாக்கரே கருதிய நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து கவர்னரின் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வலியுறுத்தி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக ஆளும் மகா விகாஷ் கூட்டணி தலைவர்களும் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.
பிரதமரிடம் முறையீடு
ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்வதற்காக போராடி வருகிறார். கவர்னர் கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில், தன்னை எம்.எல்.சி.யாக நியமிக்கும் பிரச்சினையில் தலையிடக்கோரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை போனில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.
இந்தநிலையில் நேற்று சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும், உத்தவ் தாக்கரேவுக்கு மிக நெருக்கமானவருமான மிலிந்த் நர்வேகரும் கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்கள். ஆனால் இது தொடர்பாக எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கோரும் மந்திரிசபை பரிந்துரையின் மீது விரைவாக அல்லது 3 நாட்களுக்குள் முடிவெடுக்க கவர்னருக்கு உத்தரவிட கோரி சுரீந்தர் அரோரா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வருகிற 5-ந் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், அதிரடி திருப்பமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, இந்த விவகாரத்தில் புதிய முடிவை எடுத்து இருக்கிறார். இதன்படி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்க கோரி இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
கவர்னரின் கோரிக்கையை ஏற்று மே 28-ந் தேதிக்குள் எம்.எல்.சி. பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் உத்தவ் தாக்கரேயின் முதல்-மந்திரி பதவி தப்பும். இல்லையெனில் அவர் முதல்-மந்திரி பதவியை இழப்பது தவிர்க்க முடியாததாகி விடும். எனவே கொடிய கொரோனாவுக்கு மத்தியில் மராட்டிய அரசியல் களம் பரபரப்பை எட்டி உள்ளது.
Related Tags :
Next Story