நடமாடும் வாகனங்கள் மூலம் 5,478 டன் காய்கறி, பழங்கள் வினியோகம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்
நடமாடும் வாகனங்கள் மூலம் 5,478 டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தொற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். வேளாண் விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தினமும் இருமுறை கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்கி வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காய்கறி சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக இரண்டு மடங்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடி காலத்திலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல்பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 9,915 நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் வினியோக வாகனங்கள் மூலம் இதுவரை 5,478 டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் சிறப்பான செயல்களை பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் அவர் தன் கட்சிகாரர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவதுபோல் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை நேரில் சென்று வழங்கியது, இந்தியாவில் நம்முடைய முதல்-அமைச்சர் மட்டும் தான். தமிழகத்தில் நெல், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரிசி, காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் இல்லை. இனிமேலும் அதன் விலை ஏற்றம் இருக்காது. வேளாண் விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. முதல்-அமைச்சரின் ராசியால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயம் செழித்து ஓங்குகிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் தான் இருப்பதை காண்பிப்பதற்காகவும், களத்தில் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில் தினமும் தனது கட்சிகாரர்களுடன் வீடியோவில் ஆலோசித்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுகிறது, விவசாயம் செழிக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சங்குமணி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இதைதொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சத்து மாத்திரைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story