மக்களை பாதிக்கும் திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தமாட்டார் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்பட்டாலும் அதனை முதல்-அமைச்சர் செயல்படுத்த அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதிபட கூறினார்.
விருதுநகர்,
மே தினத்தை முன்னிட்டு விருதுநகரில் தனியார் தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரிடர் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் எந்த அளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாரோ அதே போன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அனைத்து தரப்பினருக்கும் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்தவகையில் மே தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இருந்து வந்தது. அப்போதைய அறிவிப்பால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நடைமுறைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய நலனுக்கு எதிராகவும், விவசாய தொழிலாளர் நலனுக்கு எதிராகவும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கமாட்டார். தமிழக மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலோ செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தாலோ அதனை முதல்-அமைச்சர் ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டார். தமிழக மக்களின் நலனே அ.தி.மு.க. அரசுக்கு அதிமுக்கியமானதாகும்.
ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலுக்கு முன்னோடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. தற்போது கொரோனா பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றுவதே முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.
தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் இணைய ஒரே நாளில் 6 லட்சம் பேர் செல்போனில் தொடர்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் 6 லட்சம் பேர் தொடர்பு கொள்வது என்பது சாத்தியப்படுமா?. தமிழகத்தில் எதிர்கட்சியினர் குறை சொல்லிக்கொண்டு இருப்பது அவர்களின் வேலை. மக்களுக்கான பணிகளை செய்வது எங்களுக்கான வேலை.
வருகிற 3-ந்தேதிக்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் முதல்-அமைச்சர் அறிவிப்பார். மாநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவித்தது குறித்து எதிர்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னரே முதல்-அமைச்சர் இந்த நடவடிக்கையை அறிவித்தார். தற்போதும் மாவட்ட கலெக்டருடனும், உயர்மட்ட குழுவினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் சுமார் 1000 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்மவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருத்தங்கல் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பலராமன், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், வக்கீல் முத்துப்பாண்டியன், நகரம் கருப்பசாமிபாண்டியன், ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி தடையில்லாமல் நடைபெற தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். சிவகாசியில் உள்ள சில அச்சகங்களில் உரிய அனுமதியோடு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆகிய தொழில்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story