ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு: வீடுகளின் முன்பு முளைக்கும் தற்காலிக கடைகள்


ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு: வீடுகளின் முன்பு முளைக்கும் தற்காலிக கடைகள்
x
தினத்தந்தி 1 May 2020 5:50 AM IST (Updated: 1 May 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக வேலையின்றி தவிக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு தற்காலிக கடைகள் அமைத்து வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி,

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலையின்றி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்களாகவே உள்ளனர். கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், அவற்றில் வேலை பார்த்தவர்களும் வேலையின்றி வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறு உணவகம், தள்ளுவண்டி கடைகள் நடத்தி அன்றாட பிழைப்பை ஓட்டிய மக்களும் வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றனர். பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

தற்காலிக கடைகள்

வேலையின்றியும், வருமானம் இன்றியும் வீடுகளில் தவிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட கையில் பணமின்றி பரிதவிக்கும் நிலைமை உள்ளது. இதனால், அரசோ, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களோ, தன்னார்வலர்களோ வழங்கும் பொருட்களை எதிர்பார்த்து பலரும் வீடுகளில் பசியோடு காத்திருக்கும் நிலைமை உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முடங்கிக் கிடக்கும் பலரும் அத்தியாவசிய தேவைக்காக வருமானத்தை ஈட்டும் வகையில் தங்கள் வீடுகளின் முன்பு தற்காலிக கடைகளை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் தேனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் புதிது புதிதாக வீடுகளின் முன்பு கடைகள் முளைத்து வருகின்றன.

குறைந்த வருவாய்

மொத்த வியாபாரிகளை தேடிச் சென்று காய்கறி, பழங்கள், மிட்டாய்கள், இனிப்பு, கார வகைகளை வாங்கி வந்து அவற்றை தங்களின் வீட்டு வாசலில் ஒரு மேஜையில் அடுக்கி வைத்து காலை நேரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். மொத்த வியாபாரிகளிடம் வாங்கிய விலையில் இருந்து குறிப்பிட்ட அளவில் லாபத்துடன் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இவ்வாறு கடைகள் அமைப்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை லாபம் கிடைப்பதாகவும் அந்த லாபத்தை வருவாயாக எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு தேவையான இதர அத்தியாவசிய பொருட்களை வாங்குவதாக தற்காலிக கடைகள் அமைத்துள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம் வருமானம், வாழ்வாதாரம் என்றாலும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டியது அவசியம். ஏனெனில், சில இடங்களில் தயாரிப்பு தேதியோ, தயாரிப்பு நிறுவனத்தின் பெயரோ இல்லாமல் மிட்டாய் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story