கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட முந்திரி ஆலைகள் குமரியில் மீண்டும் திறப்பு 36 நாட்களுக்கு பிறகு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி


கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட முந்திரி ஆலைகள் குமரியில் மீண்டும் திறப்பு 36 நாட்களுக்கு பிறகு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 May 2020 5:58 AM IST (Updated: 1 May 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் குமரியில் மூடப்பட்ட முந்திரி ஆலைகள் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குழித்துறை, 

கொரோனா ஊரடங்கால் குமரியில் மூடப்பட்ட முந்திரி ஆலைகள் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முந்திரி ஆலைகள் மூடப்பட்டன

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். இதேபோல், குமரியில் முந்திரி ஆலைகள், ரப்பர் பால்வெட்டும் தொழில், வலை கம்பெனி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் முடங்கின.

அதன்படி 600 முந்திரி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சுமார் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள். இந்த முந்திரி ஆலைகளில் முந்திரி கொட்டைகள் வறுத்தல், உடைத்தல் உள்பட பல பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.

மீண்டும் திறப்பு

ஊரடங்கால் முடங்கி உள்ள முந்திரி ஆலையால், 75 ஆயிரம் தொழிலாளர்களும் வருமானம் இன்றி தவித்து வருவதாக ‘தினத்தந்தி‘யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வாக சிலவற்றை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்தார். இதில், முந்திரி ஆலைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், குறைவான தொழிலாளர்களை கொண்டு, சமூக இடைவெளியுடன் பணியை மேற்கொள்ளலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன்படி 36 நாட்களுக்கு பிறகு நேற்று முந்திரி ஆலைகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் சுமார் 75 முந்திரி ஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு ஆலையில் குறைவான தொழிலாளர்களை கொண்டு இயங்கியதை காணமுடிந்தது. அங்கு, முந்திரி கொட்டைகளை எடுத்து பருப்பு எடுத்தல், அந்த முந்திரி பருப்பில் இருந்து தோல் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் குறைவான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

மேலும், இந்த தொழிலாளர்கள் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளி விட்டும் பணிகளை செய்தனர். இனி வரும் நாட்களில் மீதமுள்ள தொழிற்சாலைகளும் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பியது போல் இருப்பதாக முந்திரி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story