நெல்லைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு உழவர் சந்தையில் கூடுதல் கடைகள் அமைப்பு
நெல்லையில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை,
நெல்லையில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கேரள மாநிலத்துக்கு...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள எல்லை அமைந்துள்ளது. இதனால் கேரளாவுக்கு பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் இருந்தும், நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்தும் ஏராளமான லாரிகள், வேன்கள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படும்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்வது குறைந்து விட்டது. இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வெளி மாநிலங்களிலும் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்தது. வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாநிலங்களில் இருந்து சிரமப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உள்ளூர் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி மற்றும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் இருந்து நாட்டு சோம்பு நெல்லைக்கு வருகிறது.
உள்ளூர் காய்கறிகள்
தேவர்குளம், சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கறிவேப்பிலையும், பாவூர்சத்திரம், சுரண்டை, கீழப்பாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளியும் நெல்லைக்கு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் விளையும் பூசணிக்காய், தடியங்காய், உள்ளிட்ட காய்கறிகள் மினிலாரி மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலையும் குறைந்துள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகளில் நேற்று வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் வந்தன. அங்கு பொதுமக்கள் சென்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.
உழவர் சந்தை
பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தை சார்பில், அந்த பகுதியில் உள்ள 3 பூங்காக்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக 100 கடைகள் அமைக்கப்படும். தற்போது காய்கறி வரத்தாலும், பொதுமக்கள் வரத்தாலும் கூடுதலாக 20 கடைகள் போடப்பட்டு உள்ளன. காலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் விலைப்பட்டியல் சரியாக இருக்கிறதா? என வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (விற்பனை பிரிவு) முருகானந்தம் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.
கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
மேலும் நெல்லை மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் உழவர் சந்தையில் நேற்று காலை ஆய்வு செய்தனர். அந்த குழுவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் கோபால், உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் ஆனந்தகுமார், பழனி, உதவி அலுவலர்கள் திருமுருகன், கணேசன், ஈஸ்வரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள், கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டு இருக்கிறதா, வாடிக்கையாளர்களுக்கு சரியான எடையில் காய்கறிகள் வழங்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
உழவர் சந்தையில் இருந்து தடை செய்யப்பட்ட பகுதிகளான கிருஷ்ணாபுரம், பத்தமடை ஆகிய பகுதிகளுக்கு வேன் மூலம் தலா 4 கிலோ எடையுள்ள தொகுப்பு காய்கறி பைகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டுக்கு ஆரஞ்சுபழம், அன்னாசிபழம் உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டன.
Related Tags :
Next Story