ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலாளர்கள்


ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 1 May 2020 4:01 AM GMT (Updated: 1 May 2020 4:01 AM GMT)

ஊரடங்கால் பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

அனைத்து மங்கல நிகழ்ச்சிகளுக்கும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் பூமாலை முக்கியம். மேலும் கோவில்களில் சாமிக்கும் பூக்களால் மாலை அணிவித்து பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பெரும்பாலான பக்தர்கள் சாமிக்கு மாலைகளை வாங்கி வருவார்கள். ஒரு சிலர் கட்டி வைத்த மல்லிகை, அரளி உள்ளிட்ட பூக்களை வாங்கி வருவார்கள். ஆலய வழிபாட்டில் பூக்கள், மாலைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

மேலும் சுமங்கலி பெண்கள் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற கட்டி வைத்த பூக்களை வாங்கி தலையில் சூடி கொள்வார்கள். அத்துடன் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு பூ மாலைகள் பயன்படுத்தப்படுகிறது. பூ மாலைகளை கட்டி விற்கும் தொழிலாளர்கள் தற்போது கொரோனா ஊரடங்கால் வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

போலீசார் விரட்டி அடிக்கின்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலை செய்து வருகிறார்கள். பூ மாலையை கட்டி சாலையோர கடைகள் அமைத்தும், கோவில்களுக்கு முன்பு கடைகள் அமைத்தும் தான் பெரும்பாலும் வியாபாரம் செய்வார்கள். சிலர் மல்லிகை, முல்லை போன்ற வாசனை பூக்கள் மற்றும் பல்வேறு வண்ணப்பூக்களால் கட்டப்பட்ட கதம்பம் போன்றவற்றை தெருக்களில் நேரடியாக சென்று விற்பனை செய்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் எங்களால் சரிவர கடைகளை திறந்து பூ மாலைகளை விற்பனை செய்ய முடியவில்லை. சிலர் கடைகளை திறந்து, தற்போது கிடைக்கும் பூக்களை வைத்து மாலையாகத் தொடுத்து விற்க முயன்றால் போலீசார் விரட்டி அடிக்கின்றனர். மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற பூக்கள் தோட்டக்கலைத் துறை மூலம் சென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

நிவாரணம் கிடைக்க நடவடிக்கை

ஆனால் கேந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் தோட்டத்திலேயே கிடந்து பயனற்றுப் போய் விடுகிறது. நாங்கள் இதையே காலம் காலமாக நம்பி தொழில் செய்து வருகிறோம். இந்த ஊரடங்கு உத்தரவால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பூ மாலைகள் கட்டி விற்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story