சேமிப்பு குடோன்களில் வைக்கப்படும் விளைபொருட்களுக்கு இம்மாதம் இறுதி வரை கட்டணம் இல்லை கலெக்டர் தகவல்
சேமிப்பு குடோன்களில் வைக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இம்மாதம் இறுதி வரை கட்டணம் இல்லை என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி,
சேமிப்பு குடோன்களில் வைக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இம்மாதம் இறுதி வரை கட்டணம் இல்லை என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
கொரோனா நோய் தொற்று உள்ள காலத்தில் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திட திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 13,500 டன் கொள்ளவுள்ள நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளது.
மே மாதம் வரை நீட்டிப்பு
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை இருப்பு வைத்து பாதுகாத்திடலாம். விளைபொருட்களுக்கு சந்தை விலை அதிகமாக கிடைக்கும்போது அவற்றை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்து பயன்பெறலாம்.
தற்போது நிலவும் சூழ்நிலையில் கிடங்கு கட்டணத்தை 30 நாட்களுக்கு (ஏப்ரல் வரை) செலுத்த வேண்டியதில்லை என ஏற்கனவே தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதை மேலும் 30 நாட்களுக்கு என மே மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றை வீணாகாமல் பாதுகாத்து விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணம் இம்மாதம் இறுதி வரை வசூலிக்கப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story