சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றார்: கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது கரூர்


சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றார்: கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது கரூர்
x
தினத்தந்தி 1 May 2020 10:30 AM IST (Updated: 1 May 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கடைசியாக சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றதால், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியது.

கரூர், 

கரூரில் கடைசியாக சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றதால், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியது.

வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதில் இருந்து கரூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். மொத்தம் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து 41 பேர் ஒவ்வொருவராக குணம் அடைய தொடங்கியதால், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைசியாக கரூர் மாவட்டம், தோகைமலையை சேர்ந்த ஒரு பெண் மட்டும் தொடர் சிகிச்சையில் இருந்தார். அவரும் முற்றிலும் குணமடைந்து விட்டதாக நேற்று டாக்டர்கள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று அவரை வீட்டிற்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸிவெண்ணிலா, டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் அந்த பெண்ணை வாழ்த்தி கைத்தட்டி பழங்கள் வழங்கி உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.

அமைச்சர் பேட்டி

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 79 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 58 பேரும், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 181 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் டாக்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தொடர் சிகிச்சையால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 73 பேரும், நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 50 பேரும், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 167 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று இல்லை

கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேரும் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது கரூர் மாவட்ட மக்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை எய்துவதற்கு அயராது அர்ப்பணிப்பு உணர்வுடன் இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story