கரூர் பகுதியில் உணவு இல்லாமல் தவிக்கும் இலங்கை அகதிகள்-நரிக்குறவர்கள்
கரூர் பகுதியில் உணவு இல்லாமல் இலங்கை அகதிகள்-நரிக்குறவர்கள் தவித்து வருகின்றனர்.
கரூர்,
கரூர் பகுதியில் உணவு இல்லாமல் இலங்கை அகதிகள்-நரிக்குறவர்கள் தவித்து வருகின்றனர்.
இலங்கை அகதிகள் முகாம்
கரூர் மாவட்டம், ராயனூரில் இலங்கை தமிழர்களுக்கான முகாம் உள்ளது. இம்முகாமில் 1,626 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில், குடும்ப தலைவருக்கு ரூ.1,000, குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.75, 20 கிலோ அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணமான ரூ.1,000, 20 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை முகாமில் வசிப்போருக்கும் வழங்கப்பட்டன.
முகாமில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருமே கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்தி கொண்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிக்கின்றனர். அரசு வழங்கிய அரிசி மற்றும் உதவித்தொகையை வைத்துக்கொண்டு ஊரடங்கு காலத்தை கழித்து வந்த இவர்கள், அவை தீர்ந்ததால் தினமும் உணவுக்கே திண்டாடுவதாக கூறுகின்றனர்.
நரிக்குறவர்கள்
இதேபோல், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காதப்பாறை ஊராட்சி, நரிக்குறவர் காலனி பகுதியில் 100 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊசி, பாசி, கண்ணாடி, சீப்பு விற்று வாழ்க்கை நடத்தி வந்த இவர்கள், தற்போது ஊரடங்கால் வெளியே சென்று விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக ஊசி, பாசி, மாலைகள் கண்ணாடி, சீப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது திருவிழா காலம் என்பதால் மாவட்டத்திற்கு உட்பட்ட பல ஊர்களில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்று பலூன் உள்ளிட்ட விளையாட்டு சாமான்களை விற்று வருவோம். தற்போது கொரோனா நோய் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், திருவிழாக்கள் நடை பெறவில்லை. வெளியேயும் சென்று வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தற்போது சாப்பாட்டிற்கே மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் தமிழக அரசு எங்களுக்கு உதவி கரம் நீட்டி எங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story