கடைசி நோயாளியும் குணமடைந்தார்: கொரோனா இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி - ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது


கடைசி நோயாளியும் குணமடைந்தார்: கொரோனா இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி - ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது
x
தினத்தந்தி 2 May 2020 5:00 AM IST (Updated: 1 May 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமானது. மேலும் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் ஆக மொத்தம் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 25 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். பசுவந்தனையை சேர்ந்த ஒரு மூதாட்டி கடைசியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை.

நோய் தொற்று இல்லை 

அதன்படி, சுமார் 52 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசாரும் மக்கள் வெளியில் வராத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை.

அதேநேரத்தில் தூத்துக்குடி மாநகரில் உள்ள நகர்நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தொடர்ந்து சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தொடர்ந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள ஆய்வகத்தில் தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கடைசி நோயாளி குணமடைந்தார் 

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பும், நேற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, அந்த பெண்ணுக்கு பழங்கள் வழங்கினார். தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கி, கைதட்டி வழியனுப்பி வைத்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

சிறப்பு குழு 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெளிமாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து அனுமதி பெறாமல் வருபவர்களின் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிவிக்க வேண்டும். இதனை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து நபர்கள் வருவதற்கு அந்த குழுவின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 731 பேரிடம் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார். கடைசியாக சிகிச்சை பெற்று வந்தவரும் இன்று (அதாவது நேற்று) வீடு திரும்பி உள்ளார். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு மண்டலம் 

தொடர்து 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் இல்லை என்பதால், சிவப்பு மண்டலத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது. மக்கள் சுயஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்கினால், நமது மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும்.

தன்னலம் இன்றி பணியாற்றிய மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு தேவையான ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கும் நன்றி. எஞ்சிய நாட்களிலும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி மருத்துவர் ஜெயபாண்டியன், மாநகர நல அலுவலர் அருண்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story