மீனாட்சி அம்மனுக்கு நாளை மறுநாள் திருக்கல்யாணம்; வீட்டில் இருந்தே பக்தர்கள் காண செய்யப்படும் ஏற்பாடுகள்


மீனாட்சி அம்மனுக்கு நாளை மறுநாள் திருக்கல்யாணம்; வீட்டில் இருந்தே பக்தர்கள் காண செய்யப்படும் ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 2 May 2020 12:00 AM GMT (Updated: 2020-05-02T03:11:51+05:30)

மதுரை சித்திரை திருவிழா முறைப்படி தொடங்கி இருந்தால் இன்று (சனிக்கிழமை) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்திருக்கும். ஆனால் விழா ரத்தானதால் நாளை மறுநாள் திருக்கல்யாணம் மட்டும் நடக்க இருக்கிறது. அதை வீட்டில் இருந்தே பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மதுரை, 

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் மீனாட்சி அம்மன், பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவர்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானையே திருமணம் செய்து கொண்டார்.

அவ்வாறு மதுரை அரசிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். ஊரும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் அவ்வாறு மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பட்டாபிஷேகம்

இது தவிர மதுரையை ஆளும் மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டும் நன்னாளும் இந்த திருவிழாவில் மிக விஷேசம். கடந்த 25-ந் தேதி திட்டமிட்டபடி சித்திரை திருவிழா தொடங்கி இருந்தால் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்று இருக்கும்.

ஆனால், கொரோனா என்ற கொடிய நோயால் இந்த ஆண்டு விழா தடைபட்டுள்ளது. எனவே சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.

திருக்கல்யாணம்

பொதுவாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு விஷேசமாக கருதுவார்கள். அதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் வடக்கு, மேல ஆடி வீதியில் பக்தர்கள் அமருவதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படும். அங்குள்ள மணமேடை பல லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து வரப்பெறும் பூக்களால் அலங்கரிக்கப்படும். அதன்பின்னர் மேடையில் நடைபெறும் திருமண சடங்குகள், சுவாமி-அம்மன் அலங்காரம், அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் என அந்த மணவிழாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த ஆண்டில் இவ்வளவு சிறப்புடன் அந்த விழாவை நடத்த இயலாமல் போய்விட்டது. 4-ந் தேதி காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடக்கிறது. மேலும் அங்கு 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

இணையதளத்தில் பார்க்கலாம்

மேலும் இந்த வைபவத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளமான www.ma-du-r-a-i-m-e-e-n-a-ks-hi.or-g -ல் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேத்தி மண்டபத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தை சிறப்பாக செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தில் செய்த மலர் அலங்காரம் போன்று, இம்முறையும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. சுவாமிக்கு நடத்தும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் நடராஜன் ஆகியோர் உத்தரவின் பேரில் அதற்கான வேலைகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

எனவே பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருந்து இந்த விழாவை கண்டு தரிசிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளழகர் கோவில் விழா

இதே போன்று மதுரையின் மற்றொரு திருவிழாவான கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி விடும். இதில் அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தங்க குதிரை வாகனத்தில் வந்து வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழாவும் கொரோனாவால் தடைபட்டு விட்டது. ஆனாலும் கோவில் நிர்வாகம் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்ததிருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி, புராணம் வாசித்தல் ஆகியவை மட்டும் திருக்கோவிலில் பட்டாச்சாரியார்களால் கோவிலின் உட்பிரகாரத்தில் வருகிற 8-ந் தேதி நடத்தப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை www.tnh-r-ce.gov.in என்ற இணையதளம், முகநூல் மூலமாக கண்டு தரிக்க திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் இல்லத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியையும் பார்த்து வழிபட வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story