கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை - சுகாதாரத்துறை நடவடிக்கை


கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை - சுகாதாரத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 1 May 2020 10:30 PM GMT (Updated: 1 May 2020 10:03 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் சென்று வரும் காய்கறி வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனையை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்கு உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை செய்து வரும் மதுரவாயலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும், அங்கிருந்து காய்கறி வாங்கி சென்று விற்பனை செய்த சென்னை அசோக் நகரை சேர்ந்த 2 பேருக்கும், சாலிகிராமத்தை சேர்ந்த கோயம்பேடு கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று புறங்களில் இருந்து தினமும் வாகனங்களில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வருபவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாசில்தார் குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து முதல் கட்டமாக 55 பேர்களின் பெயர் விவரம், செல்போன் எண் ஆகியவற்றை பட்டியலிட்டு உள்ளனர்.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து இருந்தனர்.

அப்போது அதிகாலை நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை நோக்கி காய்கறிகளை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.

பின்னர், வாகனங்களில் வந்த வியாபாரிகள் அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிய வேண்டும், கைகழுவுதல் வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் காய்கறி வியாபாரிகளுக்கு மருத்துவ குழுவினர் விளக்கி கூறினர்.

மேலும், அவர்களில் முதல் கட்டமாக 20 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து கொரோனா தொற்று அறிகுறி கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story