நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம்: ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் ஏமாற்றம்
ராமேசுவரம் தீவு பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மீனவர்கள் தடைகால நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் என்ற அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியில் இருந்து மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டது. அதுபோல் 61 நாள் மீன்பிடி தடை காலமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 40 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-
ஏற்கனவே மீன்பிடி தடை காலம் தொடங்குவதற்கு முன்பே, ஊரடங்கு உத்தரவால் 20 நாட்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த காலகட்டத்தில் மீனவ குடும்பங்கள் பசி பட்டினியுடன் தவித்து வந்த நிலையில், 61 நாள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 61 நாள் தடை கால நாட்களை குறைத்து, இந்த மாத இறுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மீனவர்களுக்கு தடைகால நிவாரண தொகை வழக்கம் போல் ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என மீன்துறை அமைச்சரின் அறிவிப்பு மீனவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த ஆண்டு மட்டுமாவது தடை கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஊரடங்கு உத்தரவால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், ராமேசுவரம் மற்றும் பாம்பன் தெற்குவாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகள் மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story