சோகையன் தோப்பு கிராமத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை - கலெக்டர் ஆய்வு
மண்டபம் ஒன்றியம் சோகையன் தோப்பு கிராமத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் காவல்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும், பனைக்குளம் ஊராட்சி சோகையன்தோப்பு பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த டெங்கு தடுப்பு பெண் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறையினர் அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் மூலம் 14 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியாபானு ஆலோசனையின் பேரில் துணை தலைவர் செய்யது அஸ்வர்தீன், ஊராட்சி செயலர் ரோகிணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஏற்பாட்டில் சோகையன்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று சோகையன் தோப்பு கிராமத்திற்கு வந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது பனைக்குளத்தில் இருந்து சோகையன் தோப்பு கிராமத்திற்கு செல்லும் நான்கு முக்கு சாலை முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு, பொதுமக்கள் நடமாட, வாகனங்களில் செல்ல தடைவிதித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரைக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேலிடம் இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், புதுவலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹசீனாபேகத்திடம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சேவுகப்பெருமாளிடம் சோகையன்தோப்பு கிராமத்தை தொடர்ந்து முழுமையாக கண்காணிக்கவும், சுகாதாரத்துறையினர், காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தை தடை செய்து, வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் பனைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை கலெக்டர் பார்வையிட்டார். அவருடன் உதவி கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் முருகவேல், வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், தாமரைக்குளம் சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ், பனைக்குளம் ஊராட்சி செயலர் ரோகிணி ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story