தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி


தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 May 2020 10:49 PM GMT (Updated: 2020-05-02T04:19:45+05:30)

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் 2 பேருக்கு பாதிப்பு

கொரோனா வைரசால் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 35 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. வீடு திரும்பியுள்ள 3 நபர்களுக்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் மற்றும் டாக்டர்கள் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பேராவூரணியை சேர்ந்த 34 வயதான பெண் மற்றும் மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

19 ஆக உயர்வு

இவர்கள் 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 23-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அதன்பின்னர் 7 நாட்களுக்கு பிறகு நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப் பட்டுள்ளது.

குணமடைந்து வீடு செல்லும் 3 நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 4 ஆயிரத்து 445 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,956 நபர்களுக்கு அறிகுறி இல்லை. 434 பேர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

சென்னையில் இருந்து 43 பேர்

சென்னையிலிருந்து அனுமதி பெற்று 43 பேர் மோட்டார்சைக்கிளிலும், காரிலும் வந்தனர். அப்போது விளாங்குடி சோதனை சாவடியில் அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னையில் இருந்து காருகுடி, ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்வதாக கூறினர். பின்னர் அவர்களை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பிறகு 40 பேர் மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேருக்கு லேசான இருமல் இருந்ததால் அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல பூதலூர் வட்டாரத்தில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story