உத்தரவுகளை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
கொரோனா பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு உத்தரவுகளை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் பிரகாஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவில், கூறியிருப்பதாவது:-
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒழித்து கட்டுவதற்கு தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்துவிதமான திறன்சார்ந்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சமீப நாட்களில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடைமுறைகளை கையாண்டு வருகிறது. கொரோனாவின் சமூக பரவலை கருத்தில்கொள்ளாமல் சென்னைவாசிகள் சாலைகளுக்கு வருவதாக அறியப்படுகிறது.
இதனை தடுப்பதற்காக தொற்றுநோய் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு தொடர் தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எனவே பொது இடங்களில் நோய் பரவலை தடுப்பதற்கும், சமூக விலகலை கடைபிடிப்பதற்கும் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்.
14 நாட்களில் தனிமை...
அரசு உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனமோ, கடை உரிமையாளர்களோ, நிறுவனத்தின் மேலாளர்களோ தொற்றுநோய் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களாக கருதி, விதிமுறைகளை மீறிய கடைகளுக்கோ, நிறுவனங்களுக்கோ சீல் வைக்கப்படும்.
மேலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story