‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து அரசு சலுகைகள், நிவாரண உதவிகள்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து அரசு சலுகைகள், நிவாரண உதவிகள்
x
தினத்தந்தி 1 May 2020 11:25 PM GMT (Updated: 2020-05-02T04:55:38+05:30)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து அரசு சலுகைகள், நிவாரண உதவிகள் கிடைத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பாலையூர், 

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து அரசு சலுகைகள், நிவாரண உதவிகள் கிடைத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளிகள் கொரோனா ஊரடங்கால் மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவின்பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ஸ்ரீனிவாசன் நேரில் சென்று நிவாரணம் வழங்கி அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து சென்றார்.

ரூ.6 ஆயிரம் சம்பளம்

இதனை தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின் பேரில் திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனை கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி நேரில் சென்று வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், திருமணஞ்சேரி கோவிலில், இந்த குடும்பத்தை சேர்ந்த தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் ரகு என்கிற பிரகலாதனுக்கு தொடர்ந்து மாத சம்பளமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது அவருடன் கோவில் கணக்காளர் ராஜகோபால் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் மாநில தலைவர் நாராயணன், குத்தாலம் பிராமண சங்க தலைவர் வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

பொதுமக்கள் பாராட்டு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் மற்றும் அரசு சலுகைகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story