55 வயதுக்கு மேற்பட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி உத்தரவு
55 வயதுக்கு மேற்பட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நேற்று பெங்களூரு சாந்திநகர் கே.எஸ்.ஆர்.டி.சி. மத்திய அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மாவட்ட போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது லட்சுமண் சவதி பேசியதாவது:-
“கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள், மிக நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்ற வேண்டும். தேவையான முன்னேற்பாடுகளுடன் இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து நாம் மீண்டு வந்து நிலைத்து நிற்க முடியும்.
முக கவசம் அணிய வேண்டும்
பசுமை மண்டலத்தில் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்தால், தொழிலாளர்கள் முக கவசம் அணிய வேண்டும். பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும் சமூக விலகல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பஸ் நிலையங்களில் உள்ளே நுழையவும், வெளியேறவும் 2 வழிகள் மட்டுமே இருக்க வேண்டும். பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லும்போது போக்குவரத்து தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. டீசலை அதிகளவில் சிக்கனமாக பயன்படுத்திய டிரைவர்களில் 4 போக்குவரத்து கழகங்களில் இருந்தும் தலா ஒருவர் வீதம் தேர்ந்து எடுக்கப்பட்டு 4 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.”
இவ்வாறு லட்சுமண் சவதி பேசினார்.
முன்னதாக ரூ.5 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட நடமாடும் மருத்துவ மைய சேவையை துணை முதல்- மந்திரி லட்சுமண் சவதி தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story