ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்


ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 May 2020 5:38 AM IST (Updated: 2 May 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்துள்ளது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

நாகப்பட்டினம், 

ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்துள்ளது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

பேட்டி

நாகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மே தினத்தை முன்னிட்டு கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தவிர்க்க வேண்டும்

ஊரடங்கு உத்தரவு நாளையுடன்(3-ந் தேதி) முடிவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்குமா? அல்லது விலக்கி கொள்ளப்படுமா? என்பதை அரசு உடனடியாக தெரிவித்து மக்களை பீதிக்குள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திடீரென ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை கஷ்டப்படுத்தி உள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தினந்தோறும் பிழைப்பு நடத்தி வந்த ஏழை மக்களின் வாழ்வாதாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த கவலையும் அடையவில்லை. சின்ன, சின்ன உதவிகளை மாநில அரசு செய்தது. அதுவும் முழுமையாக சென்றடையவில்லை. எனவே இவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விளை பொருட்களை விற்க முடியவில்லை

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அப்படியே கொண்டு சென்றாலும் உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை. சிறு, குறு தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அந்த நிறுவனங்களும் முடங்கியுள்ளதால் எப்படி சம்பளம் வழங்க முடியும்? என்று கேள்வி எழுகிறது. எனவே அந்த நிறுவனங்களையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு

மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் சென்றவர்கள் மீண்டும் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிகவும் காலதாமதமானதாகும். காலஅவகாசம் கொடுத்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதை மாநில அரசும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது. நாளை(அதாவது இன்று) நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு காலத்தில் கஷ்டப்படும் விவசாயிகள், தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story