17 நாட்களாக தொற்று இல்லை: குமரியில் கொரோனா வீரியம் குறைந்தது சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது


17 நாட்களாக தொற்று இல்லை: குமரியில் கொரோனா வீரியம் குறைந்தது சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது
x
தினத்தந்தி 2 May 2020 5:43 AM IST (Updated: 2 May 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் 17 நாட்களாக புதிதாக தொற்று இல்லை. இதனால் கொரோனா வீரியம் குறைந்தது. சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது.

நாகர்கோவில், 

குமரியில் 17 நாட்களாக புதிதாக தொற்று இல்லை. இதனால் கொரோனா வீரியம் குறைந்தது. சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது.

ஆரஞ்சு மண்டலமாக மாறியது

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் தோப்பு, நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்த நிலையில் 16 பேரில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் 6 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாலும், கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதனால் கொரோனா வீரியம் குமரி மாவட்டத்தில் குறைந்துள்ளது. எனவே சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட் டுள்ளது.

150 பேருக்கு பரிசோதனை

அதேநேரத்தில் தினமும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குறைந்தது 50 முதல் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஆனால் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 20 லட்சம் மக்களுக்கு முதல் கட்டமாக சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்டோருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இந்த நிலையில் 2-வது கட்டமாக கடந்த 4 நாட்களாக சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்றுடன் இந்த ஆய்வு நிறைவு பெற்றது. இதில் நேற்று முன்தினம் வரை 57 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாருக்கும் கொரோனா இல்லை. இறுதிநாளில், 18 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிகளுக்கு...

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, பிரசவத்துக்கு இன்னும் ஒரு வாரம், 10 நாட்கள் இருக்கும் நிலையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இந்த பரிசோதனை கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது. அதோடு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story