கொரோனா பரவலை தடுக்க வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு


கொரோனா பரவலை தடுக்க வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 6:45 AM IST (Updated: 2 May 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.

நாகர்கோவில், 

வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த நோயால் மாவட்டத்தில் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று விலகி 10 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய பணியில் சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவிலில் கொரோனா பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறையினர் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர். மேலும் அங்கு சுகாதாரத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து வெளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்களில் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நாகர்கோவில் அப்டா மார்க்கெட் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தீவிர சோதனை

இதேபோல் ஒழுகினசேரி பாலத்தின் இருபுறமும், பார்வதிபுரம் பாலம், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலைய பகுதிகளிலும் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் மீதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நாகர்கோவில் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது.

இதேபோல் இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மாவட்டத்தின் எல்லை பகுதிகளான களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே குமரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

Next Story