தொழில் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகத்திலேயே இருக்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
“தொழில் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகத்திலேயே இருக்க வேண்டும்” என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கட்டுமானம், மெட்ரோ ரெயில் திட்ட பணிகள், காவல் பணி என பல பணிகளில் தமிழகம் உள்பட வெளிமாநிலத்தினர் தான் அதிகமாக ஈடுபடுகிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் தங்களில் 50 சதவீதம் பேர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள 50 சதவீதத்தினர் சொந்த ஊருக்கு செல்ல தயாராக உள்ளனர்.
அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகத்திலேயே இருக்க வேண்டும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு
“மே தினத்தையொட்டி தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் உழைத்து வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய கடினமான நேரத்தில் அரசு உங்களுக்கு ஆதரவாக உள்ளது. உங்களின் ஒத்துழைப்பு காரணமாக மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. மிக விரைவாகவே தொழில் நிறுவனங்களின் பணிகள் தொடங்கவுள்ளன. இது தொடர்பாக தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் நான் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.
பயப்படத்தேவை இல்லை
தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என்றும், சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். அதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயப்பட தேவை இல்லை. நீங்கள் இங்கேயே அதாவது கர்நாடகத்திலேயே இருக்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவு வந்ததும், தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story