பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டில் இன்று மனு தாக்கல்
பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நாகர்கோவில்,
பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாலியல் தொல்லை
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்தி நெருங்கியதாக தெரிகிறது.
மேலும் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும், காசி தன்னிடம் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கந்துவட்டி கேட்டு மிரட்டி மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதற்கிடையே காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இன்று மனு தாக்கல்
இந்த நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:-
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காசி மீது இதுவரை வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவலும், ஆதாரமும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. எனவே, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக இன்று (சனிக்கிழமை) நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். கோர்ட்டு அனுமதித்தால் காசியை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வோம். அதில் கிடைக்கும் தகவல்கள், ஆதாரங்களை கொண்டு வெளி மாவட்டங்களில் விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story