சேமிப்பு கிட்டங்கிகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் ஷில்பா தகவல்
சேமிப்பு கிட்டங்கிகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
சேமிப்பு கிட்டங்கிகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேமிப்பு கிட்டங்கிகள்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், நெல்லை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் நெல்லை மாவட்டத்தில் ராமையன்பட்டி, வள்ளியூர், அம்பை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை எவ்வித வாடகையுமின்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் சேமித்து வைத்துக்கொள்ளவும், சேமித்து வைக்கும் விளைபொருட்களின் பேரில், எவ்வித வட்டியின்றி விளைபொருளின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் பொருளட்டுக்கடன் பெறவும், குளிர்பதன கிட்டங்கிகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கட்டணமின்றி இருப்பு வைத்து பயன் பெறலாம் என அறிவித்தார்.
பயன்படுத்திக்கொள்ளலாம்
தற்போது முதல்- அமைச்சரால் மேலும் ஒரு மாத காலத்திற்கு எவ்வித வாடகை மற்றும் வட்டியின்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதன கிட்டங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் விற்பனைக்குழுவிற்கு செலுத்தும் 1 சதவீதம் சந்தை கட்டணத்தில் இருந்தும், ஒரு மாத காலத்திற்கு விலக்களித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களை 6369401502 (நெல்லை), 8248636188 (வள்ளியூர்), 9842819089 (அம்பை) ஆகிய செல்போன் எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story