விற்பனை ஆகாததால் பழுத்து வீணாகிறது: நெல்லையில் கால்நடைகளுக்கு தீவனமாகும் சாம்பார் வெள்ளரி


விற்பனை ஆகாததால் பழுத்து வீணாகிறது: நெல்லையில் கால்நடைகளுக்கு தீவனமாகும் சாம்பார் வெள்ளரி
x
தினத்தந்தி 2 May 2020 7:35 AM IST (Updated: 2 May 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விற்பனை ஆகாததால் பழுத்து வீணாகும் சாம்பார் வெள்ளரிகள் கால்நடைகளுக்கு தீவனமாக கொட்டப்படுகிறது.

நெல்லை, 

நெல்லையில் விற்பனை ஆகாததால் பழுத்து வீணாகும் சாம்பார் வெள்ளரிகள் கால்நடைகளுக்கு தீவனமாக கொட்டப்படுகிறது.

காய்கறி உற்பத்தி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காய்கறிகள் அதிக அளவு பயிர் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆலங்குளம், பாவூர்சத்திரம், வள்ளியூர், சங்கரன்கோவில், மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, சாம்பார் வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படுகின்றன. குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே காய்கறி மார்க்கெட்டுகள் இயங்குவதால் காய்கறிகள் போதிய விற்பனை ஆகாமல் அழுகி வீணாகிறது.

கால்நடைகளுக்கு உணவு

கத்தரிக்காய், மல்லி இலை, புதினா இலை உள்ளிட்டவை அழுகுவதால் தெருவில் வீசப்பட்டு கால்நடைகளுக்கு உணவாகிறது. தற்போது நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் இயங்குகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக நயினார்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சாம்பார் வெள்ளரிக்காய் விற்பனை இல்லாமல் மார்க்கெட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. கோடை வெயிலில் வெள்ளரிக்காய் பழுத்து வீணாகிறது. அந்த வெள்ளரிப்பழங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக மார்க்கெட் அருகே கொட்டப்படுகின்றன. அவற்றை ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. மேலும் மூட்டைகளில் இருக்கும் நல்ல பழங்களை, சிலர் வீட்டில் வளர்க்கும் முயலுக்கு உணவாக வழங்க கொண்டு செல்கிறார்கள்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

அனுமதிக்க வேண்டும்

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், காய்கறி கடைகள் குறிப்பிட்ட நேரம் தான் திறந்து இருக்கிறது. அதனால் காய்கறிகள் சரியாக விற்பனையாவது இல்லை. இதனால் காய்கறிகள் அழுகி விடுகின்றன. சாம்பார் வெள்ளரிக்காய் உடனுக்கு உடன் விற்பனை செய்ய வேண்டும். அதனை இருப்பு வைக்க முடியாது. தற்போது கோடை வெயிலுக்கு மூட்டைகளில் உள்ள சாம்பார் வெள்ளரிக்காய் பழுத்து வீணாகின்றன. அதனை கால்நடைகளுக்கு தான் கொட்ட வேண்டியதுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாலை 3 மணி வரை காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story