ஊதுபத்தி, சாம்பிராணி விற்க முடியவில்லை பார்வையற்றவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய கொரோனா


ஊதுபத்தி, சாம்பிராணி விற்க முடியவில்லை பார்வையற்றவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய கொரோனா
x
தினத்தந்தி 2 May 2020 8:08 AM IST (Updated: 2 May 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

ஊதுபத்தி, சாம்பிராணி விற்க முடியாததால் பார்வையற்றவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

திருச்சி, 

ஊதுபத்தி, சாம்பிராணி விற்க முடியாததால் பார்வையற்றவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

பார்வையற்றவர்கள்

பார்வை தெரியாவிட்டாலும் பிச்சை எடுக்காமல் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற தன்னம்பிக்கை உடையவர்கள் பார்வையற்றவர்கள். மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற்றாலும் அவர்களின் குடும்ப வாழ்க்கையை ஓட்டுவதற்கு அது போதுமானதாக இல்லை. இதனால், பார்வையற்றவர்கள் ரெயிலில் சென்று ஊதுபத்தி, சாம்பிராணி, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை விற்பதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் நாகமங்கலம் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர், தீரன் மாநகர், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். ஓரளவு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் கொரோனா வடிவில் வந்தது வினை. இதனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

குமுறல்

வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களின் குறைகளை கேட்டு மளிகை உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது பசியை போக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. (ரெயில்வே நிர்வாகத்தின் ஒப்பந்த நிறுவனம்) மற்றும் தன்னார்வ அமைப்பினர் தினமும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறாாகள். இதனால், தங்களுக்கு 3 வேளையும் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால், வருவாய் ஈட்ட வழியின்றி தவித்து வருவதாக தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.

வருவாய் இல்லை

இதுகுறித்து காந்திநகரை சேர்ந்த பார்வையற்றோர் தம்பதி லாசர், ஆரோக்கியமேரி கூறியதாவது:-

பார்வையற்றவர்களாகிய நாங்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் ஊதுபத்தி, சாம்பிராணி, ஜவ்வாது, வாசனை திரவியங்கள், பேனா உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறோம். புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று அவற்றை ரெயில்களில் விற்பனை செய்து வந்தோம். கொரோனா ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. பஸ், ரெயில் சேவையும் இல்லை. எங்களது பிரதான விற்பனையகமே ரெயில் பயணிகளும், பஸ் பயணிகளும்தான். அவர்கள்தான் எங்கள்மீது இரக்கப்பட்டு ஏதாவது பொருட்களை வாங்குகிறார்கள். அதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். அதுதான் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க உதவியாக இருக்கிறது. எங்களுக்கு உணவு கிடைத்தாலும் கல்லூரியில் படிக்கும் மகனுக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாமலும், தையல் பயிற்சி வகுப்பு செல்லும் மகளுக்கு கட்டணத்தொகை கட்டுவதற்கும் வருவாய் இல்லாமல் தவிக்கிறோம். 40 நாட்களை தாண்டிவிட்டால் ஊதுபத்தி பூசணம் பிடித்து கெட்டுவிடும். ஊரடங்கு 35 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் இனி அவை வீணாகத்தான் போகும். அதனால் எங்களுக்கு நஷ்டம்தான். எங்கள் தொழிலை மேற்கொள்ள ஊரடங்கு எப்போது முடியும், ரெயில்கள் எப்போது ஓடும்? என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டமைப்பு பொதுச்செயலாளர்

திருச்சி மாவட்டத்தில் 6 பார்வையற்ற சங்கங்களை ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வீரப்பன் கூறுகையில், ரெயில்களில் ஊதுபத்தி, சாம்பிராணி என விற்பனைக்கு சென்றால், வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமை மட்டும்தான் வீடு திரும்புவோம். எஞ்சிய நாட்களில் ரெயில்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற இடம். எங்களது நிலையை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். வேண்டிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.

வீட்டுக்கு 10 கிலோ அரிசி மட்டும்தான் அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு உதவிகள் கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாக மத்திய அரசு மாதந்தோறும் தலா ரூ.1000 கொடுக்க உத்தரவிட்டது. அந்த தொகை எப்போது கிடைக்கும் எனவும் தெரியவில்லை.

எங்களுக்கு உணவு கிடைத்தாலும் வருவாய் ஈட்ட வழியில்லை. ஊரடங்கு முடியும் வரை குடும்பத்திற்கு தினமும் ரூ.300 உதவித்தொகை வழங்க வேண்டும், என்றார்.

Next Story