சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 2 May 2020 8:32 AM IST (Updated: 2 May 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனாவின் பிடியில் சென்னை

தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகரம் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியேறி வெளி இடங்களுக்கு செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

9 பேர் வருகை

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு 9 பேர் வந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த 9 பேரில் 4 பேர் புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள். மீதி 5 பேரில் மூவர் தொட்டியம் ஒன்றியம் மணமேடு ஊராட்சி அழகரை கல்லுப்பட்டி கிராமத்தையும், 2 பேர் காட்டுப்புத்தூர் ஒன்றியம் காடுவெட்டி என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த 4 பேரும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் இவர்கள் 4 பேரும் ஒரு லாரியில் ஏறி தங்களது சொந்த ஊரான சாத்தப்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு வந்து உள்ளனர்.

கலெக்டர் நேரடி விசாரணை

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று காலை சாத்தப்பாடி கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். கலெக்டர் உத்தரவுப்படி அவர்கள் 4 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அவர்களது வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறப்பட்ட பின்னரே அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது உறுதி செய்யப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டனர்

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வருவதற்கும், வெளியில் உள்ளவர்கள் அந்த வீட்டிற்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிமைப்படுத்திக்கொண்டாலே போதும், சத்தான உணவுகள் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொள்ளும்படியும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

தொட்டியம் ஒன்றியம் அழகரை கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 3 பேரில் இருவர் அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்கள் 3 பேரும் லாரி மூலம் நேற்று முன்தினம் இரவு நொச்சியம் வந்து இறங்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து நடந்தே தங்களது சொந்த கிராமத்தை நேற்று மாலை அடைந்து உள்ளனர். இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைப்பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். நேற்று இரவு தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் அழகரை கல்லுப்பட்டி கிராமத்திற்கு சென்று 3 பேரையும் அவர்களில் ஒருவரது வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடைவிதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இன்று அவர்களது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதேபோல, காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த இருவரும் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சிவராசு ‘வெளி மாநிலம் அல்லது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து யார் வந்தாலும் அதுபற்றி அறிந்தவர்கள் உடனடியாக மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்’ என உத்தரவிட்டு உள்ளார்.

Next Story